சனி, 20 செப்டம்பர், 2014

ஏற்றப்பாடல்




பிள்ளையாரே... பிள்ளைப்பெருமானே
உன்னைத்தொழுவேனே..
உன்னைத்தொழுவோர்க்கு என்னங்கடையாளம்
சங்கந்திருவாட்சி சாத்துந்தண்டமால
போத்தும் புலி தோலு

பிள்ளையாரை நோக்கி - நாங்க
என்னென்னா படைப்போம் - அவர்க்கு
வேருல பழுத்த வெள்ளரிக்கா நூறு
கோம்புல பழுத்த கொய்யாக்காயும் நூறு

ஆன அடிபோல - பிள்ளையார்க்கு
அப்பளங்கள் கோடி
குதர அடி போல கொழுக்கட்டையும் கோடி

ஓரேனேகல் வேலு 
ஒருபதிகால் ஒன்னு ஒரு பதிகால் ரெண்டு
ஒரு பதிகால் மூனு ஒரு பதிகால் நாலு

ஓரங்கம் ஒரு நாள் - அது
சீரங்கம் திருநாள் - அந்த
சீரங்கத்து தேர - சாமி
சிங்காரிப்பார் யாரோ - அந்த 

ஆசாரி வண்ணான்
அலங்கரிப்பார் தேரை - அந்த
நாட்டாரெல்லாம் கூடி 
நடத்தி வைப்பார் தேரை - அந்த
ஊராரெல்லாம் கூடி
ஓட்டிவைப்பார் தேரை...

(தொடரும்)

செவ்வாய், 15 ஜனவரி, 2013

விடுகதை




1.சந்துல பொந்துல நீ வளந்த
சமுத்தரத்துல நான் பொறந்தன்
ரெண்டுபேர் எழுத்தும்
ஒரே எழுத்து

2.சின்னகுட்டியும்
சின்ன பயலும்
சேந்து கட்டின தாலிய
சீரழிய சிறப்பழிய
சிக்கில்லாம எடுத்தவங்களுக்கு
சின்ன பட்டணம் பாதி

3.கம்மாரம் கருப்பு
சிதம்பரம் சிவப்பு
ஒடச்சா பருப்பு
தின்னா கசப்பு

4. செக்கச் செவேர்னு இருப்பா
செட்டியாரு மொவ
நாள சந்தைக்கு வருவா
வாத்தியாரு மொவ

5. எண்ணெயிலே பொறந்து
எண்ணெயிலே வளந்த
எண்ணெ செக்கான் மொவள
எள்ளுக்கும் சின்ன எல
என்ன எல?








விடை: 1.கத்திரிக்காயும் கருவாடும்,2.குருவிக்கூடு,3.குண்டுமணி(குன்றி மணி),4.மிளகாப்பழம்,5.விடத்தரமிலை

புதன், 23 மே, 2012

ஏரி..





ஏரியின்னா ஏலேலோ பெரிய ஏரி
இருகரையும் ஏலேலோ பொன்னேரி

பொன்னேரி ஏலேலோ கரைதனிலே
போட்டானாம் ஏலேலோ தூண்டிமுள்ளு

தூண்டியின்னா ஏலேலோ தொட பெருமாம்
துள்ளுவாள ஏலேலோ கை பொருமாம்

இடி இடிக்க ஏலேலோ மழபொழிய
இருண்ட வெள்ளம் ஏலேலோ பெரண்டோடும்

பெரண்டோடும் ஏலேலோ வெள்ளத்துல
பெண்களெல்லாம் ஏலேலோ நீர்குளிக்க

நீர்குளிச்சி ஏலேலோ நீராடி
நீல வர்ண ஏலேலோ பொட்டுவச்சி

ஊசி போல ஏலேலோ வாக்கெடுத்து
உன்னிதமா ஏலேலோ பொட்டுவச்சி

கத்திபோல ஏலேலோ வாக்கெடுத்து
கச்சிதமா ஏலேலோ பொட்டுவச்சி

வாளையின்னா ஏலேலோ வளவனூரு
வந்தெறங்கும் ஏலேலோ சின்னகட

கருப்பு நல்ல ஏலேலோ சைக்கிள் வண்டி
காஞ்சிபுரம் ஏலேலோ போகும் வண்டி

காஞ்சிபுரம் ஏலேலோ டேசனிலே
காசாட்டம் ஏலேலோ ஆடையிலே

காசநல்ல ஏலேலோ மறச்சானேதான்
கால்விலங்க ஏலேலோ போட்டானல்லே

சிவப்பு நல்ல ஏலேலோ சைக்கிள் வண்டி
செஞ்சிபுரம் ஏலேலோ போகும் வண்டி

செஞ்சிபுரம் ஏலேலோ டேசனிலே
சீட்டாட்டம் ஏலேலோ ஆடையிலே

சீட்டநல்ல ஏலேலோ மறச்சானேதான்
சிறுவெலங்க ஏலேலோ பொட்டானேதான்

வண்ண வண்ண ஏலேலோ கள்ஞ்செதுக்கி
வாடஞ்சம்பா ஏலேலோ கட்டடுக்கி

வாடஞ்சம்பா ஏலேலோ நெல்லளக்க
வல்லாளன ஏலேலோ காணோமேதான்

சின்ன சின்ன ஏலேலோ களஞ்செதுக்கி
சீவஞ்சம்பா ஏலேலோ கட்டடுக்கி

சீவஞ்சம்பா ஏலேலோ நெல்லளக்க
சீராளன ஏலேலோ காணோமேதான்

நீலேதான் ஏலேலோ வளையலிட்டு
நெல்லறுக்க ஏலேலோ போற பெண்ணே

நீலேதான் ஏலேலோ வளைய மின்ன
நெல்லறுப்பும் ஏலேலோ சோருதடி

கண்ணாடி ஏலேலோ வளையலிட்டு
கம்பறுக்க ஏலேலோ போற பெண்ணே

கண்ணடி ஏலேலோ வளைய மின்ன
கம்பறுப்பும் ஏலேலோ சோருதடி

பள்ளத்துல ஏலேலோ பயிரழகாம்
பறச்சி பொண்ணே ஏலேலோ நடையழகாம்

சினிமாகொட்டா ஏலேலோ தொறந்திருக்கு
சிவாஜி ஏலேலோ வந்திருக்கார்

சிவாஜி ஏலேலோ அவர்களுக்கு
சிவந்தியப்பூ ஏலேலோ தோரணமாம்
சீப்பி மேல ஏலேலோ ஊர்வலமாம்

அரிசி கட ஏலேலோ தொறந்திருக்கு
அண்ணாதொர ஏலேலோ வந்திருக்கார்

அண்ணதொர ஏலேலோ அவர்களுக்கு
அல்லிப்பூ ஏலேலோ தோரணமாம்
அர்ஜண்டா ஏலேலோ ஊர்கோலமாம்


எண்ண கட ஏலேலோ தொறந்திருக்கு
எம்ஜியாரு ஏலேலோ வந்திருக்கார்

எம்ஜியாரு ஏலேலோ அவர்களுக்கு
மல்லியப்பூ ஏலேலோ தோரணமாம்
மரகதமா ஏலேலோ ஊர்கோலமாம்

கள்ளுகட ஏலேலோ தொறந்திருக்கு
கருணநிதி ஏலேலோ வந்திருக்கார்

கருணாநிதி ஏலேலோ அவர்களுக்கு
கள்ளிப்பூ எலேலோ தொரணமாம்
கழுதமேல ஏலேலோ ஊர்கோலமாம்.

பாடியவர் : திருமதி. அம்புஜம் (60),கல்வி- இரண்டாம் வகுப்பு,சாதி- வண்ணர்,பிறந்த ஊர்- கூத்தக்குடி, விழுப்புரம் மா.வ.,சேகரித்த ஊர்- மருங்கூர், கடலூர் மா.வ.,நாள்- 24/10/1999,சேகரித்தமுறை-ஒலிப்பதிவு, சூழல் -செயற்கைச்சூழல்,பாடலைத் தகவலாள்ளர் கற்ற முறை - 12 வயதில் சகோதரியிடம் கற்றது.

சேகரித்தவர் - முனைவர் இரத்தின புகழேந்தி.
குறிப்பு : இப்பாடல் எளிய மக்களின் அரசியல் பார்வையையும் அது குறித்த அவர்களின் விமர்சனத்தையும் வெளிப்படுத்துகிறது. நாட்டுப்புறப்பாடல்களில் அரசியல் வெளிப்பாடு குறித்து ஆராய்பவர்களுக்கு இப்பாடல் உதவும்.



வியாழன், 19 ஜனவரி, 2012

பல வகை நாட்டுப்புறப் பாடல்கள்


1. தாலாட்டு

ஆராரோ ஆரிரிரோ
ஆரடிச்சா ஏனழுதாய்
அடிச்சவரை சொல்லியழு
ஆக்கினைகள் சொல்லிடுறேன்
தொட்டாரை சொல்லியழு
தொழுவிலங்கு போட்டுடுறென்
அத்தை அடிச்சாளோ
அன்னமிட்ட கையாலே
அண்ணன் அடிச்சானோ
அலீப்பூ தண்டாலே
மாமி அடிச்சாளோ
மருந்து போடும் கையாலே

மாமா அடிச்சானோ
மல்லிகைப்பூ செண்டாலே...

2. விளையாட்டுப் பாடல்

மழவருது மழவருது
நெல்லு அள்ளுங்க

முக்காப்படி அரிசி எடுத்து
முறுக்கு சுடுங்க

ஏரு ஓட்டுற மாமனுக்கு
எண்ணி வையுங்க

சும்மா இருக்குற மாமனுக்கு
சூடு வையுங்க..

3. தொழிற் பாடல்

சந்திரரே சூரியரே
சாமி பகவானே
சந்திரர நன் நெனைச்சி
எடுத்தேன் திரு அலவு
எடுத்த திரு அலவு
எழுந்து பயிர் ஏற வேணும்...

4. கொண்டாட்டப்பாடல்

ஒரு தட்டு மண்ணெடுத்து செய்தேனக்கா மூக்குத்தி
மாமாங்கம் பாக்கக்குள்ல தோந்துதக்கா மூக்குத்தி
பார்த்தவங்க லேலே கொடுத்திடுங்க
பசுவித்து லேலே பணமுந்தரேன்
எடுத்தவங்க லேலே கொடுத்திடுங்க
எரும வித்து லேலே பணமுந்தரேன்.

5.  வழிபாட்டுப் பாடல்

ஒரு சொம்பு லே லேலே நீரெடுத்து
ஊத்துங்கடி  லே லேலே பூஞ்செடிக்கு
கிள்ளுங்கடி லே லேலே முல்லரும்ப
சாத்துங்கடி லே லேலே சரஸ்வதிக்கு.

செவ்வாய், 30 நவம்பர், 2010

ஒப்பாரிப்பாடல்

ஒப்பாரி தாய்க்கு
தாவார பஞ்சு மெத்த
தாயாரா தூங்கும் மெத்த
தாயாரு இருக்குமட்டும் – எனக்கு
தண்ணி குளியலுண்டு
தங்கி வர நாயமுண்டு – இன்னிக்கி
தாயாரு இல்லாம – எனக்கு
தண்ணி குளியலில்ல
தங்கி வர நாயமில்ல
ஏலக்கா பஞ்சு மெத்த
ஈஸ்வரியா தூங்கும் மெத்த
ஈஸ்வரியா இருக்குமட்டும் – எனக்கு
எண்ண குளியலுண்டு
இருந்து வர நாயமுண்டு – இன்னிக்கு
ஈஸ்வரியா இல்லாம – எனக்கு
எண்ண குளியலில்ல
இருந்து வர நாயமில்ல

ஒப்பாரி - தந்தைக்கு

கட்டு கட்டா தென்ன மரம்
கல்கண்டு காய்க்கும் மரம்
கலகண்டு தின்ன மொவ – இன்னிக்கு
கவலப்பட்டு நிக்குறோமே
முட்டு முட்டா தென்ன மரம்
முட்டாயி காய்க்கும் மரம்
முட்டாயி தின்ன மொவ – இன்னிக்கு
மொகம் சோந்து நிக்கிறோமே
தெக்குத்தி வெங்காயம் – நாங்க
தென் மதுர பாப்பாத்தி – இந்த
திண்ணக்கி வந்தவ – எங்கள
திண்ண பெருக்குன்னா
தெருவு புறமா நில்லுன்னா
எங்கள பெத்த அய்யா இருந்தா – நாங்க
திண்ண பெருக்க மாட்டோம்
தெருவு புறமா நிக்க மாட்டோம்
வட்க்குத்தி வெங்காயம் – நாங்க
வட மதுர பாப்பாத்தி – ஒங்க
வளவுக்கு வந்தவ – எங்கள
வாச பெருக்குன்னா
வட புரமா நில்லுன்னா
எங்கள பெத்த அய்யா இருந்தா – நாங்க
வாச பெருக்க மாட்டோம்
வட புறமா நிக்க மாட்டோம்.
பாடியவர் : காவேரி , மருங்கூர், கடலூர் மாவட்டம்.

திங்கள், 29 நவம்பர், 2010

விளையாடுப் பாடல்

அத்த வீடுக்குப் போனன்
ஆபிள் பழம் தந்தாங்க
வேண்டாம்னு சொன்னன்
வெளிய வந்து பாத்தன்
வெளியெல்லாம் பாம்பு

பாம்பு அடிக்க குச்சி எடுத்தன்
குச்சியெல்லாம் சேறு

சேறு கழுவ ஆத்துக்குப் போனன்
ஆறெல்லாம் மீனு

மீன் புடிக்க வலை எடுத்தன்
வலையெல்லாம் ஓட்ட

ஓட்ட தைக்க ஊசி எடுத்தன்
ஊசியெல்லாம் வெள்ளி

வெள்ளியம்மா வெள்ளி
ஒங்கம்மா குள்ளி.


பாடியவர் : பானுப்பிரியா (14) , பரவளூர் , கடலூர் மாவட்டம்.