புதன், 23 மே, 2012

ஏரி..

ஏரியின்னா ஏலேலோ பெரிய ஏரி
இருகரையும் ஏலேலோ பொன்னேரி

பொன்னேரி ஏலேலோ கரைதனிலே
போட்டானாம் ஏலேலோ தூண்டிமுள்ளு

தூண்டியின்னா ஏலேலோ தொட பெருமாம்
துள்ளுவாள ஏலேலோ கை பொருமாம்

இடி இடிக்க ஏலேலோ மழபொழிய
இருண்ட வெள்ளம் ஏலேலோ பெரண்டோடும்

பெரண்டோடும் ஏலேலோ வெள்ளத்துல
பெண்களெல்லாம் ஏலேலோ நீர்குளிக்க

நீர்குளிச்சி ஏலேலோ நீராடி
நீல வர்ண ஏலேலோ பொட்டுவச்சி

ஊசி போல ஏலேலோ வாக்கெடுத்து
உன்னிதமா ஏலேலோ பொட்டுவச்சி

கத்திபோல ஏலேலோ வாக்கெடுத்து
கச்சிதமா ஏலேலோ பொட்டுவச்சி

வாளையின்னா ஏலேலோ வளவனூரு
வந்தெறங்கும் ஏலேலோ சின்னகட

கருப்பு நல்ல ஏலேலோ சைக்கிள் வண்டி
காஞ்சிபுரம் ஏலேலோ போகும் வண்டி

காஞ்சிபுரம் ஏலேலோ டேசனிலே
காசாட்டம் ஏலேலோ ஆடையிலே

காசநல்ல ஏலேலோ மறச்சானேதான்
கால்விலங்க ஏலேலோ போட்டானல்லே

சிவப்பு நல்ல ஏலேலோ சைக்கிள் வண்டி
செஞ்சிபுரம் ஏலேலோ போகும் வண்டி

செஞ்சிபுரம் ஏலேலோ டேசனிலே
சீட்டாட்டம் ஏலேலோ ஆடையிலே

சீட்டநல்ல ஏலேலோ மறச்சானேதான்
சிறுவெலங்க ஏலேலோ பொட்டானேதான்

வண்ண வண்ண ஏலேலோ கள்ஞ்செதுக்கி
வாடஞ்சம்பா ஏலேலோ கட்டடுக்கி

வாடஞ்சம்பா ஏலேலோ நெல்லளக்க
வல்லாளன ஏலேலோ காணோமேதான்

சின்ன சின்ன ஏலேலோ களஞ்செதுக்கி
சீவஞ்சம்பா ஏலேலோ கட்டடுக்கி

சீவஞ்சம்பா ஏலேலோ நெல்லளக்க
சீராளன ஏலேலோ காணோமேதான்

நீலேதான் ஏலேலோ வளையலிட்டு
நெல்லறுக்க ஏலேலோ போற பெண்ணே

நீலேதான் ஏலேலோ வளைய மின்ன
நெல்லறுப்பும் ஏலேலோ சோருதடி

கண்ணாடி ஏலேலோ வளையலிட்டு
கம்பறுக்க ஏலேலோ போற பெண்ணே

கண்ணடி ஏலேலோ வளைய மின்ன
கம்பறுப்பும் ஏலேலோ சோருதடி

பள்ளத்துல ஏலேலோ பயிரழகாம்
பறச்சி பொண்ணே ஏலேலோ நடையழகாம்

சினிமாகொட்டா ஏலேலோ தொறந்திருக்கு
சிவாஜி ஏலேலோ வந்திருக்கார்

சிவாஜி ஏலேலோ அவர்களுக்கு
சிவந்தியப்பூ ஏலேலோ தோரணமாம்
சீப்பி மேல ஏலேலோ ஊர்வலமாம்

அரிசி கட ஏலேலோ தொறந்திருக்கு
அண்ணாதொர ஏலேலோ வந்திருக்கார்

அண்ணதொர ஏலேலோ அவர்களுக்கு
அல்லிப்பூ ஏலேலோ தோரணமாம்
அர்ஜண்டா ஏலேலோ ஊர்கோலமாம்


எண்ண கட ஏலேலோ தொறந்திருக்கு
எம்ஜியாரு ஏலேலோ வந்திருக்கார்

எம்ஜியாரு ஏலேலோ அவர்களுக்கு
மல்லியப்பூ ஏலேலோ தோரணமாம்
மரகதமா ஏலேலோ ஊர்கோலமாம்

கள்ளுகட ஏலேலோ தொறந்திருக்கு
கருணநிதி ஏலேலோ வந்திருக்கார்

கருணாநிதி ஏலேலோ அவர்களுக்கு
கள்ளிப்பூ எலேலோ தொரணமாம்
கழுதமேல ஏலேலோ ஊர்கோலமாம்.

பாடியவர் : திருமதி. அம்புஜம் (60),கல்வி- இரண்டாம் வகுப்பு,சாதி- வண்ணர்,பிறந்த ஊர்- கூத்தக்குடி, விழுப்புரம் மா.வ.,சேகரித்த ஊர்- மருங்கூர், கடலூர் மா.வ.,நாள்- 24/10/1999,சேகரித்தமுறை-ஒலிப்பதிவு, சூழல் -செயற்கைச்சூழல்,பாடலைத் தகவலாள்ளர் கற்ற முறை - 12 வயதில் சகோதரியிடம் கற்றது.

சேகரித்தவர் - முனைவர் இரத்தின புகழேந்தி.
குறிப்பு : இப்பாடல் எளிய மக்களின் அரசியல் பார்வையையும் அது குறித்த அவர்களின் விமர்சனத்தையும் வெளிப்படுத்துகிறது. நாட்டுப்புறப்பாடல்களில் அரசியல் வெளிப்பாடு குறித்து ஆராய்பவர்களுக்கு இப்பாடல் உதவும்.