செவ்வாய், 30 நவம்பர், 2010

ஒப்பாரிப்பாடல்

ஒப்பாரி தாய்க்கு
தாவார பஞ்சு மெத்த
தாயாரா தூங்கும் மெத்த
தாயாரு இருக்குமட்டும் – எனக்கு
தண்ணி குளியலுண்டு
தங்கி வர நாயமுண்டு – இன்னிக்கி
தாயாரு இல்லாம – எனக்கு
தண்ணி குளியலில்ல
தங்கி வர நாயமில்ல
ஏலக்கா பஞ்சு மெத்த
ஈஸ்வரியா தூங்கும் மெத்த
ஈஸ்வரியா இருக்குமட்டும் – எனக்கு
எண்ண குளியலுண்டு
இருந்து வர நாயமுண்டு – இன்னிக்கு
ஈஸ்வரியா இல்லாம – எனக்கு
எண்ண குளியலில்ல
இருந்து வர நாயமில்ல

ஒப்பாரி - தந்தைக்கு

கட்டு கட்டா தென்ன மரம்
கல்கண்டு காய்க்கும் மரம்
கலகண்டு தின்ன மொவ – இன்னிக்கு
கவலப்பட்டு நிக்குறோமே
முட்டு முட்டா தென்ன மரம்
முட்டாயி காய்க்கும் மரம்
முட்டாயி தின்ன மொவ – இன்னிக்கு
மொகம் சோந்து நிக்கிறோமே
தெக்குத்தி வெங்காயம் – நாங்க
தென் மதுர பாப்பாத்தி – இந்த
திண்ணக்கி வந்தவ – எங்கள
திண்ண பெருக்குன்னா
தெருவு புறமா நில்லுன்னா
எங்கள பெத்த அய்யா இருந்தா – நாங்க
திண்ண பெருக்க மாட்டோம்
தெருவு புறமா நிக்க மாட்டோம்
வட்க்குத்தி வெங்காயம் – நாங்க
வட மதுர பாப்பாத்தி – ஒங்க
வளவுக்கு வந்தவ – எங்கள
வாச பெருக்குன்னா
வட புரமா நில்லுன்னா
எங்கள பெத்த அய்யா இருந்தா – நாங்க
வாச பெருக்க மாட்டோம்
வட புறமா நிக்க மாட்டோம்.
பாடியவர் : காவேரி , மருங்கூர், கடலூர் மாவட்டம்.

திங்கள், 29 நவம்பர், 2010

விளையாடுப் பாடல்

அத்த வீடுக்குப் போனன்
ஆபிள் பழம் தந்தாங்க
வேண்டாம்னு சொன்னன்
வெளிய வந்து பாத்தன்
வெளியெல்லாம் பாம்பு

பாம்பு அடிக்க குச்சி எடுத்தன்
குச்சியெல்லாம் சேறு

சேறு கழுவ ஆத்துக்குப் போனன்
ஆறெல்லாம் மீனு

மீன் புடிக்க வலை எடுத்தன்
வலையெல்லாம் ஓட்ட

ஓட்ட தைக்க ஊசி எடுத்தன்
ஊசியெல்லாம் வெள்ளி

வெள்ளியம்மா வெள்ளி
ஒங்கம்மா குள்ளி.


பாடியவர் : பானுப்பிரியா (14) , பரவளூர் , கடலூர் மாவட்டம்.

செவ்வாய், 16 நவம்பர், 2010

விளையாட்டுப் பாடல்

தண்ணி தண்ணி

என்னா தண்ணி
பச்சத் தண்ணி

என்னா பச்ச
அம்மாம் பச்ச

என்னா அம்மா
டீச்சர் அம்மா

என்னா டீச்சர்
கணக்கு டீச்சர்

என்னா கணக்கு
வீட்டுக் கணக்கு

என்னா வீடு
மொட்ட வீடு

என்னா மொட்ட
திரிப்பதி மொட்ட

என்னா திரி
வெளக்குத் திரி

என்னா வெளக்கு
குத்து வெளக்கு

என்னா குத்து
கும்மாங் குத்து...!

பாடியவர் : செந்தமிழ்ச்செல்வி, வயது : 12 , ஊர் : தொரவளூர், விருத்தாசலம் வட்டம், கடலூர் மாவட்டம்.
சேகரிப்பு : இரத்தின புகழேந்தி, நாள் : 12.11. 2010

ஞாயிறு, 14 நவம்பர், 2010

ஐந்தாங்காய் பாட்டு

ஐந்தாங்காய் பாட்டு

புள்ளையார் உட்டுட்டேன்
பூவு பறிச்சுட்டேன்
பொட்டிக்குள்ள வச்சுட்டேன்
எங்கடி அக்கா மாம்பழம்

ஈரெட்ட ரெட்ட
எலுமிச்சந்தட்ட

பூ பூ புளியம்பூ
புட்டியில வச்ச தாழம்பூ
தாழம்பூவ ரெண்டாக்கி
தங்கச்சி கையில மூணாக்கி
அச்சச்சோ அடுப்புல
அவரக்கா வேவுல
மாமன் வரான் தோப்புல
மல்லிகப்பூ பூக்குல

பாடியவர் : செந்தமிழ்ச்செல்வி, வயது : 12 , ஊர் : தொரவளூர், விருத்தாசலம் வட்டம், கடலூர் மாவட்டம்.

சேகரிப்பு : இரத்தின புகழேந்தி, நாள் : 12.11. 2010