சனி, 19 டிசம்பர், 2009

ஒப்பாரி

கோசு பனி பேயும்
கோதாம்பு நெல் வெளையும்
குடுக்க எடம் இல்லண்ணு - இந்த
குழியிலயும் தள்ளுனாங்க - இந்த
குழிய உட்டு நீங்கி வர - எனக்கு
கோடி நாளு செல்லுதம்மா.

மாசி பனி பேயும்
மகிழம்பூ நெல் வெளையும்
மடிக்க எடம் இல்லாம- இந்த
மடுவுலயும் தள்ளுனாங்க - இந்த
மடுவ உட்டு நீங்கி வர - எனக்கொரு
மாமாங்கம் செல்லுதம்மா.

குறிப்பு: தனக்கு சரியான குடும்பத்தில் மணவாழ்க்கை அமையவில்லை என்கிற ஏக்கத்தை இந்த ஒப்பாரி வெளிப்படுத்துகிறது.

வெள்ளி, 18 டிசம்பர், 2009

வயல்வெளிப் பாட்டு


ஊசி போல மப்பெறங்கி
உரல போல காலெறங்கி
காலெறங்கி பேஞ்ச மழ
காடு மேடெல்லந் தண்ணி வர

வெள்ளான உழுது வர
வேடர் மக்க பில்லரிக்க
கருப்பான உழுது வர
கள்ளர் மக்க பில்லரிக்க

மோடு வெட்டி முள் பொறுக்கி
முத்துச் சோளம் தென வெதைச்சி
காடு வெட்டி முள் பொறுக்கி
கம்மஞ்சோளம் தென வெதச்சி

சாச்சி சாச்சி வெதைக்கும் தென
சாக்கு தென மாளலியோ
கொட்டி கொட்டி வெதைக்கும் தென
கூட தென மாளலியா

ஓராந்தான் திங்களிலே
ஓரெலயாந் தின பயிரு
ஒரு கட்டு முழுங்கி வெட்டி
ஒரு பக்கம் தட்டி கட்டி.
............

பத்தாந்தான் திங்களிலே
பஞ்சந் திங்க பதமாச்சுதே.

தகவலாளர்: கல்யாணி, மருங்கூர்.
சேகரிப்பு: இரத்தின.புகழேந்தி.

வியாழன், 17 டிசம்பர், 2009

பாலூரணகரையில்

More than a Blog Aggregator
கார்கொடல் சொட்டவனம்
கார்மாங்குடிகளெல்லாம்
ஆறு போல வெள்ளம் வந்து
சேரு நெல்லு தள்ளி போவ
பட்டுசேல பொட்டி வண்டி
நெட்டி தள்ளி போவுது
வல்லியமுங் கீரனூரு
நல்ல மேலப்பாலூரு
பாலூரணகரையில்
வேண பொணம் போவுதடி
கெழக்க தொழூரானடி
கீழப்பால்ரு தேவங்குடி
குடியிருந்த கொடுமனூரு
தள்ளிபோனா மருங்கூரு
அக்கரையில் ஓட்டி மேடு
ஓட்டி மேடு பெருந்தொர
நாட்டினஞ் செறுவரப்பூரு
சின்ன ரெக்கணம் பெரிய ரெக்கணம்
தட்டானொட தம்மனூரு
மூணு லட்சம் காணி
சேதமாச்சி
சனம் பாவம்... பாவம்...

தகவலாளர்: ஆனந்தி,
சேகரித்தவர்: இரத்தின.புகழேந்தி.

குறிப்பு: மணிமுத்தாற்றுக்கும் வெள்ளாற்றுக்கும் இடையில் அமைந்த அழகிய சிற்றூர் மருங்கூர். ஆறுகளில் வெள்ளம் வரும்போது ஆனந்தி பாட்டியின் இந்தப்பாடல் நினைவுக்கு வரும். 1993 ஆம் ஆண்டு சேகரித்த பாடல் இது.