சனி, 19 டிசம்பர், 2009

ஒப்பாரி

கோசு பனி பேயும்
கோதாம்பு நெல் வெளையும்
குடுக்க எடம் இல்லண்ணு - இந்த
குழியிலயும் தள்ளுனாங்க - இந்த
குழிய உட்டு நீங்கி வர - எனக்கு
கோடி நாளு செல்லுதம்மா.

மாசி பனி பேயும்
மகிழம்பூ நெல் வெளையும்
மடிக்க எடம் இல்லாம- இந்த
மடுவுலயும் தள்ளுனாங்க - இந்த
மடுவ உட்டு நீங்கி வர - எனக்கொரு
மாமாங்கம் செல்லுதம்மா.

குறிப்பு: தனக்கு சரியான குடும்பத்தில் மணவாழ்க்கை அமையவில்லை என்கிற ஏக்கத்தை இந்த ஒப்பாரி வெளிப்படுத்துகிறது.

வெள்ளி, 18 டிசம்பர், 2009

வயல்வெளிப் பாட்டு


ஊசி போல மப்பெறங்கி
உரல போல காலெறங்கி
காலெறங்கி பேஞ்ச மழ
காடு மேடெல்லந் தண்ணி வர

வெள்ளான உழுது வர
வேடர் மக்க பில்லரிக்க
கருப்பான உழுது வர
கள்ளர் மக்க பில்லரிக்க

மோடு வெட்டி முள் பொறுக்கி
முத்துச் சோளம் தென வெதைச்சி
காடு வெட்டி முள் பொறுக்கி
கம்மஞ்சோளம் தென வெதச்சி

சாச்சி சாச்சி வெதைக்கும் தென
சாக்கு தென மாளலியோ
கொட்டி கொட்டி வெதைக்கும் தென
கூட தென மாளலியா

ஓராந்தான் திங்களிலே
ஓரெலயாந் தின பயிரு
ஒரு கட்டு முழுங்கி வெட்டி
ஒரு பக்கம் தட்டி கட்டி.
............

பத்தாந்தான் திங்களிலே
பஞ்சந் திங்க பதமாச்சுதே.

தகவலாளர்: கல்யாணி, மருங்கூர்.
சேகரிப்பு: இரத்தின.புகழேந்தி.

வியாழன், 17 டிசம்பர், 2009

பாலூரணகரையில்

More than a Blog Aggregator
கார்கொடல் சொட்டவனம்
கார்மாங்குடிகளெல்லாம்
ஆறு போல வெள்ளம் வந்து
சேரு நெல்லு தள்ளி போவ
பட்டுசேல பொட்டி வண்டி
நெட்டி தள்ளி போவுது
வல்லியமுங் கீரனூரு
நல்ல மேலப்பாலூரு
பாலூரணகரையில்
வேண பொணம் போவுதடி
கெழக்க தொழூரானடி
கீழப்பால்ரு தேவங்குடி
குடியிருந்த கொடுமனூரு
தள்ளிபோனா மருங்கூரு
அக்கரையில் ஓட்டி மேடு
ஓட்டி மேடு பெருந்தொர
நாட்டினஞ் செறுவரப்பூரு
சின்ன ரெக்கணம் பெரிய ரெக்கணம்
தட்டானொட தம்மனூரு
மூணு லட்சம் காணி
சேதமாச்சி
சனம் பாவம்... பாவம்...

தகவலாளர்: ஆனந்தி,
சேகரித்தவர்: இரத்தின.புகழேந்தி.

குறிப்பு: மணிமுத்தாற்றுக்கும் வெள்ளாற்றுக்கும் இடையில் அமைந்த அழகிய சிற்றூர் மருங்கூர். ஆறுகளில் வெள்ளம் வரும்போது ஆனந்தி பாட்டியின் இந்தப்பாடல் நினைவுக்கு வரும். 1993 ஆம் ஆண்டு சேகரித்த பாடல் இது.

செவ்வாய், 28 ஏப்ரல், 2009

விடுகதை

More than a Blog Aggregator1.சந்துல பொந்துல நீ வளந்த
சமுத்துரத்துல நான் பொறந்தன்
ரெண்டு பேர் எழுத்தும் ஒரே எழுத்து
2.கம்மாரம் கருப்பு சிதம்பரம் சிவப்பு
ஒடச்சா பருப்பு தின்னா கசப்பு
3.செக்க செவேர்னு இருப்பா செட்டியாரு மொவ
நாளை சந்தைக்கு வருவா வாத்தியாரு மொவ
4.மஞ்ச குளிச்சியிருக்கும் போது பார்க்க வந்திங்களா?
புள்ள பெத்து இருக்கும்போது புடுங்க வந்திங்களா?
5.காயும் கோணக்கா கொள்ளுடா மச்சான் கொள்ளு
வெடியும் வெடிச்சுட்டேன் சொல்லுடா மச்சான் சொல்லு
6.இந்திரரே சூரியரே மாமா
சந்திர மேகம் சாஞ்சி கெடக்கு பாரு
அவ கெடக்குரா ரவுடி
அறத்து கட்டுன சாதி
எட்டு கட்டு மேலேரி குத்துபட்ட சாதி
7.பூமியிலே பெண் பிறந்து பாவியானேன்
பிடித்தவர் கைக்கு அடங்கலானேன்
சாதியிலே சின்ன சாதியானேன்
சண்டைக்கு முன்பாக ஓடி வருவேன்
கோயில் குளமெல்லாம் சுற்றி வந்தும்
கொண்டைக்கு பூவற்ற பாவியானேன்
8.சாண்ட குடிச்ச மச்சான்
சத்தரத்த கட்டி வச்சான்
போக வர வழி வச்சான்
பொந்துக்குள்ள கைய வுட்டான்
வெளக்க அணைச்சான்
வேலைய ஆரம்பிச்சான்
9.லால் பேட்டைக்கும் மன்னார்குடிக்கும்
நடக்க கெட்டிகாரி
பால் இல்லாம புள்ள வளக்க
பலே கெட்டிகாரி
10.என்ன ஏண்டா அடிக்கிற
ஏஞ்சாண்ட குடிக்கிற.
விடைகள்: 1.கத்திரிக்காய், கருவாடு 2.குண்டுமணி 3.மிளகாய் 4.வேர்க்கடலை 5.கொள்ளு 6.நெல்லு 7.விளக்குமாறு 8.திரையரங்கு 9.கோழி 10.நாய்.

செவ்வாய், 31 மார்ச், 2009

சம்பந்தப் பாட்டு

More than a Blog Aggregatorசம்பந்தப் பாட்டுகண்ணாலம் கண்ணாலம் கர்ணரோட கண்ணாலம் எப்ப எப்ப கண்ணாலம் நளையிம்பார் இண்ணையிம்பார் வெள்ளிக்கிழமையிம்பார் விடிய ரெண்டு நாழியிம்பார் கண்ணாலமின்னு சொல்லி காரேரி பாக்கு வச்சேன் பரவ மடி கோலி பாப்பாருக்கும் பாக்கு வச்சேன் செறுவ மடிகோலி செட்டியாருக்கும் பாக்கு வச்சேன். தெக்குத்தி யானைக்கும் தென்னெலைக்கும் சீட்டெழுதி தெக்குத்தி யானையும் தென்னெலையும் வந்தெறங்கும் வடக்குத்தி யானைக்கும் வாழெலைக்கும் சீட்டெழுதி வடக்குத்தி யானையும் வாழெலையும் வந்தெறங்கும். தங்கப் பொடி நுணுக்கி தண்ணி தொற கோலம் போட்டேன் வெள்ளி பொடி நுணுக்கி வெளி வாசல் கோலம் போட்டேன். பட்டு உடுத்தி நல்ல- எங்க புள்ள பவுனு நக மே போட்டு பந்தாட போன எடத்த பாத்து மடி புடிச்ச பழிகார பொண்ணரசே. நல்லெண்ண தேச்சு நயமா தல மொழுவி நல்லூரு ஏரிக்கு ஊஞ்சலுக்கு போகையிலே ஊஞ்சலுக்கு கீழிருந்து கெஞ்சுனது நீதானா பொன்னு முச்சி போட்டு என் ஆயர் பூமி விளையாடயிலே-அந்த பூமரத்து கீழிருந்து புலம்புனது நீதானா .................. செல்ல மகன பெத்தேன் மடிமேல செழிப்பான சம்பந்தம் போடன் கெடி மேல. - சின்னப்பிள்ளை

வெள்ளி, 27 மார்ச், 2009

நையாண்டிப்பாடல்


ஓகோ ஓகோ செங்கரும்புக்காரா
ஒங்க அம்மாவும் செத்துபுட்டா வாடா
செத்தாலும் செத்தா போறா மயிலே- நான்
வல்லன்னு போய் சொல்லு குயிலே!
ஓகோ ஓகோ செங்கரும்புக்காரா
ஒங்க அப்பனும் செத்துபுட்டான் வாடா
செத்தாலும் செத்தா போறான் மயிலே-நான்
வல்லன்னு போய் சொல்லு குயிலே
ஓகோ ஓகோ செங்கரும்புக்காரா
ஓம் பொண்டாட்டி செத்துபுட்டா வாடா
செத்தாலும் செத்தா போறா மயிலே -நான்
வல்லன்னு போய் சொல்லு குயிலே
ஓகோ ஓகோ செங்கரும்புக்காரா
ஓங்கூத்தியா செத்துபுட்டா வாடா
என்னண்ணு செத்துது ஏம்பவுனு
ஏதுன்னு செத்துது ஏம் பவுனு
வடக்குத்தி வாழஞ்சம்பா மயிலுக்கு
வடபுறமா எண்ண கிண்ணி குயிலுக்கு
தெக்குத்தி சீவஞ்சம்பா மயிலுக்கு
தென் புறமா எண்ண கிண்ணி குயிலுக்கு!
கொல்லன கூப்பிடுங்க மயிலுக்கு -ஒரு
குத்துக்கால் செப்பனிட மயிலுக்கு
தச்சன கூப்பிடுங்க மயிலுக்கு -ஒரு
தங்கக்கால் செப்பனிட குயிலுக்கு!
பச்ச முழிங்கி வெட்டி மயிலுக்கு
பக்குவமா பாடகட்ட குயிலுக்கு
வண்ணான கூப்பிடுங்க மயிலுக்கு
வர்ணமான சேல கட்ட குயிலுக்கு
பூவாண்டிய கூப்பிடுங்க மயிலுக்கு
பாட சுத்தி பூவுகட்ட குயிலுக்கு
பாத்து தகனம் பண்ண மயிலுக்கு
பக்குவமா தான் புதைக்க குயிலுக்கு!
-பூராசாமி படையாட்சி

வியாழன், 26 மார்ச், 2009

வயல் வெளிப் பாட்டு

ஊசி போல மப்பெறங்கி
உரலப்போல காலெறங்கி
காலெறங்கி பேஞ்ச மழ
காடு மேடெல்லாந்தண்ணி வர
வெள்ளான உழுது வர
வேடர் மக்க பில்லரிக்க
கருப்பான உழுது வர
கள்ளர் மக்க பில்லரிக்க
மோடு வெட்டி முள் பொறுக்கி
முத்துச்சோளம் தென வெதச்சி
காடு வெட்டி முள் பொறுக்கி
கம்மஞ்சோளம் தென வெதச்சி
சாச்சி சாச்சி வெதைக்கும் தென
சாக்கு தென மாளலையோ
ஓராந்தான் திங்களிலே
ஓரெலையாம் தின பயிரு
ஒரு பக்கம் முழிங்கி வெட்டி
ஒரு பக்கம் தட்டி கட்டி ...........
பத்தாந்தான் திங்களிலே
பஞ்சந்திங்க பதமாச்சிதே
-கல்யாணி

புதன், 25 மார்ச், 2009

சிறுவர் பாடல்கள்

மழ வருது மழ
வருதுநெல்லு அள்ளுங்க
முக்காப்படிஅரிசி போட்டுமுருக்கு சுடுங்க
ஏறு ஓட்டுற மாமனுக்கு
எண்ணி வையுங்க
சும்மா இருக்குற மாமனுக்குசூடு வய்யுங்க.

அத்தி பழம் விக்குதடி
தனக்கோடிஅண்ணங்கிட்ட சொல்லாதடி சின்னபாப்பா ஒன்னையும் என்னையும் வளத்தாங்கரோட்டுல
ஏண கட்டி போட்டாங்ககம்மங்கருது போல வளத்தாங்க-இந்தகமினேட்டி பயலுகிட்ட குடுத்தாங்கசோளப் பயிரு போல வளத்தாங்க-இந்தசோம்பேரி பயலுகிட்ட குடுத்தாங்க.

எண்ணெ இல்ல சீப்பில்லஊதாப்
பொடவ இல்லஉன்னக் கூட நா வல்ல

வடக்க குடுக்காதீங்கவாடிம்பான்
போடிம்பான்வல்லார ஓழிம்பான்என்ன
யாருக்கும் குடுக்காதீங்கஎன்ன பெத்த
அப்பாவுக்கே குடுத்துடுங்க.

திங்கள், 23 மார்ச், 2009

தாலாட்டு

ஆராரோ ஆரிரரோ
ஆரடிச்சா நீனழுத
கணணே ஒரங்கொரங்கு
கரத்தமணி கண்ணொரங்கு
பாலும் அடுப்புலியே
பாலர்களும் தொட்டிலிலே-நான்
பால எறக்குவனா-நான் வளர்த்த பாலர்கள தூக்குவனா
சோறும் அடுப்புலியே
சுந்தரர்கள் தொட்டிலிலே
சோத்த எறக்குவனா-நான் வளர்த்த
சுந்தரர தூக்குவனா?
தொட்டிலுண்டு மெத்தையுண்டு
தூசி படா வாசலுண்டு
தூசி படா வாசலிலே
தூக்கம் வரலியா-இந்த தூதுளங்கா காட்டுக்குள்ள
தூக்கம் வந்ததென்ன?